search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    கோவையில் கழிப்பறைக்குள் முதியவரை பூட்டி விட்டு ரூ.5 லட்சம் கொள்ளை

    கோவையில் கழிப்பறைக்குள் முதியவரை பூட்டிவிட்டு, ரூ.5 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
    பேரூர்:

    கோவை அருகே உள்ள பச்சாபாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 80), ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் ஸ்ரீதர் (34), தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சக்தி நகரில் உள்ள வீட்டில் சாரங்கபாணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு படுக்கை அறையில் இருந்து எழுந்த சாரங்கபாணி, இயற்கை உபாதைக்காக கழிப்பறைக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கமிருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சாரங்கபாணி உள்ளே இருந்தபோது நைசாக கழிப்பறை கதவை பூட்டி விட்டனர்.

    இதன்பின்னர் படுக்கை அறைக்குள் நுழைந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த துணிகளை கலைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? என்று தேடினர். தங்கம் இல்லாததால் அங்கு இருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    கழிப்பறைக்குள் அடைபட்டு கிடந்த சாரங்கபாணி கதவை திறக்க முடியாததால் சத்தம் போட்டவாறு கதவை தட்டிக்கொண்டே இருந்து உள்ளார். நீண்டநேரமாக இந்த சத்தம் கேட்டதால் மற்றொரு படுக்கை அறையில் இருந்த ஸ்ரீதர் எழுந்து சென்று பார்த்து உள்ளார். அப்போது சாரங்கபாணி கழிப்பறைக்குள் சிக்கி தவித்தது தெரியவந்தது. கழிப்பறைக்குள் இருப்பது தெரியாமல் கதவை ஏன் பூட்டினாய்? என்று சாரங்கபாணி தனது மகன் ஸ்ரீதரிடம் கேட்டபோது நான் பூட்டவில்லை என்று கூறியுள்ளார். அப்போது யார்? பூட்டியிருப்பார்கள் என்று சந்தேகமடைந்த 2 பேரும் படுக்கை அறைக்குள் சென்றனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த தகவலின் பேரில், பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தெனமநல்லூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×