search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க தங்களது குழந்தைகளுடன் வந்த தம்பதியை படத்தில் காணலாம்.
    X
    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க தங்களது குழந்தைகளுடன் வந்த தம்பதியை படத்தில் காணலாம்.

    வாடகை செலுத்தாததால் சாவியை பறித்துக்கொண்ட வீட்டு உரிமையாளர்

    வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை பறித்து கொண்டதாகவும், வாடகை செலுத்த அவகாசம் வழங்கக்கோரியும் கலெக்டரிடம் தம்பதி மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று நடைபெறவில்லை. மாறாக பெட்டியில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனு போட வருபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.

    மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாந்தோணிமலை வ.உ.சி.நகர் முதல் தெருவை சேர்ந்த சக்திவேல் உள்பட பலர் திரண்டு வந்து புகார் பெட்டியில் போட்ட மனுவில், மகளிர் சுய உதவிக்குழுவினரிடம், வங்கி கடன் கட்ட நெருக்கடி கொடுக்கும் வங்கி மேலாளர்கள், வங்கி சாரா நிதிநிறுவன மேலாளர்கள் மற்றும் வசூல் செய்யும் முகவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் பொதுமக்கள் வாங்கிய கடனை மார்ச் முதல் செப்டம்பர் வரை கட்டுவதற்கான காலத்தை தள்ளி வைக்க வேண்டும், என அதில் கூறியிருந்தனர்.

    கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், தாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கால் உறவினர் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றோம். தற்போது கடந்த 16-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வாடகை செலுத்தினால் தான் வீட்டிற்குள் வரவேண்டும் என வீட்டின் உரிமையாளர் சாவியை பறித்து விட்டார்.

    இதனால் கடந்த ஒருவாரமாக அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் சாப்பிட்டு விட்டு, உறவினர் வீட்டில் தங்கி வருகிறோம். எனவே வாடகை செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்கி வீட்டின் சாவியை மீட்டு தரவேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×