search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரியகுளத்தில் முழு ஊரடங்கு- அமல்தேனி, ஆண்டிப்பட்டியில் புதிய கட்டுப்பாடுகள்

    நாளுக்குநாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக பெரியகுளத்தில் நேற்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி, ஆண்டிப்பட்டியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக அதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தேனியிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. மேலும், எந்த தொடர்பும் தெரியாமல் சமூக பரவல் போல் பொதுமக்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில் தேனி பாரஸ்ட்ரோடு, பாலன்நகர், ரத்தினம் நகர், சுப்பன்தெரு, துப்புரவு பணியாளர் குடியிருப்பு, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு யார் மூலம் கொரோனா வைரஸ் பரவியது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சமூக பரவல் குறித்த அச்சம் மக்களிடம் அதிகரித்து உள்ளது.

    பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட வண்ணம் உள்ளனர். இதனால், பெரியகுளம் நகராட்சி பகுதிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நேற்று மாலை 5 மணியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து கடைகளும் நேற்று மாலையில் அடைக்கப்பட்டன. மறுஉத்தரவு வரும் வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

    இதனால், பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் அனைத்து வகையான கடைகள், உணவகங்கள், வங்கிகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், நகராட்சி பகுதிகளில் ஆட்டோ, மினிவேன், மினி பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள், இறைச்சி ஆகியவற்றை வீடுதோறும் சென்று வினியோகம் செய்ய வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதேபோல், தேனி நகரில் உள்ள ஓட்டல்களில் நேற்று முதல் உணவுகளை பார்சலில் மட்டுமே வழங்குவது என்றும், ஓட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பது இல்லை என்றும் தேனி நகர் ஓட்டல் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி இந்த கட்டுப்பாடு அனைத்து ஓட்டல்களிலும் நேற்று அமலுக்கு வந்தன. வருகிற 30-ந்தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று தேனி நகர் ஓட்டல் சங்க தலைவர் கண்ணதாசன், செயலாளர் பொன்.முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

    ஆண்டிப்பட்டி நகரில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கடைகளை திறப்பதில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்டிப்பட்டியில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், உணவகங்களில் மாலை நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்க ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×