search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வங்கி ஊழியர் போல் பேசி ஆன்லைன் மூலமாக ரூ.33 ஆயிரம் மோசடி - வாலிபர் கைது

    திருப்பூரில் வங்கி ஊழியர் போல் பேசி ஆன்லைன் மூலமாக ரூ.33 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஆர்.வி.இ. நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பெருமாள் அவருடைய கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, சி.வி.வி. எண் மற்றும் அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த பாஸ்வேர்ட் ஆகியவற்றை அந்த நபரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பெருமாளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.32 ஆயிரத்து 989 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், வங்கியில் விசாரித்தபோது, வங்கி ஊழியர் போல் பேசிய நபர், தனது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை ஆன்லைன் முலமாக மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் பிரிவில் பெருமாள் புகார் அளித்தார். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வைத்து சேலம் மாவட்டம் தாதகப்பட்டியை சேர்ந்த தினேஷ்(வயது 28) என்பவரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெருமாளிடம் செல்போனில் பேசி ஆன்லைன் மூலமாக ரூ.32 ஆயிரத்து 989-ஐ எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுபோல் அவர் சென்னை, கோவை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.அவரிடம் இருந்து 13 சிம்கார்டுகள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினேசை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் பாராட்டினார்கள். 
    Next Story
    ×