search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்த காட்சி
    X
    அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்த காட்சி

    கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் 464 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் 464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் சணப்பிரட்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன், எண்டோஸ்கோபி உள்ளிட்ட ரூ.7 கோடியே 18 லட்சம் மதிப்பிலான அதிநவீன கருவிகளின் பயன்பாட்டையும், அவசர சிகிச்சை அரங்கின் பயன்பாட்டையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக் கப்பட்டுள்ள ரூ.6½ கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ. கருவியினையும், ரூ.21 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதை உபாதை கண்டறியும் கருவியினையும், ரூ.47 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான அறுவை அரங்கினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதித்த 494 நோயாளிகள் சிகிச்சைபெற்று, 464 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 241 பேர் தொற்றுடன் வந்தவர்கள், 223 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவர்கள். தற்போது நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 3 பேரும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் என மொத்தம் 30 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரசு விதிப்படி மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிக தனிமைப்படுத்தும் இடமாக குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி இக்கல்லூரியில் 98 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொற்று அல்லாதவர்கள் மட்டுமே அங்கு தங்க வைக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1000 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் தவறாது தங்களை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள ஒத்துழைக்க வேண்டும். என்றார். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக இடங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
    Next Story
    ×