search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு தீர்ப்பு
    X
    கோர்ட்டு தீர்ப்பு

    தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை- நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

    குமாரபாளையம் அருகே தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பள்ளர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). சாயப்பட்டறை தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் (43) என்பவரின் மனைவி மரகதத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி கண்ணியப்பன் அவரது மகன் கவுரிசங்கருடன் சேர்ந்து ஆறுமுகத்தை இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணியப்பன் மற்றும் கவுரிசங்கரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கவுரிசங்கர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கொலை வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்ததற்காக கண்ணியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×