search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேராசிரியையை குடும்பத்துடன் கடத்திய 4 பேர் கைது

    கணவரின் நண்பர் வாங்கிய கடனுக்காக கல்லூரி பேராசிரியையை குடும்பத்துடன் கடத்திச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போடி:

    தேனி மாவட்டம் போடி சேதுராமன்நகரை சேர்ந்தவர் இமானுவேல் ராஜ்குமார் (வயது 52). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜூடிஜெனிதா. இவர் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இமானுவேல் ராஜ்குமாரின் நண்பர் முத்துவேல் என்பவர், கோட்டூரை சேர்ந்த கிருபானந்த தயாநிதி என்பவரிடம் ரூ.43 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தாத நிலையில், அதற்கு இமானுவேல் ராஜ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அவரும் கடனை செலுத்தவில்லை. இதனால் இமானுவேல் ராஜ்குமார், அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரையும், கிருபானந்த தயாநிதி (45), அவருடைய மனைவி மணி மேகலை (35), ராயப்பன்பட்டியை சேர்ந்த தில்பிரசாத் (32) மற்றும் 7 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை கோட்டூரில் உள்ள தோப்பில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் அணிந்து இருந்த 3½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு அவர்களை மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இமானுவேல் ராஜ்குமார் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தலில் ஈடுபட்டதாக அரண்மனைப்புதூரை சேர்ந்த சாலமன் ராஜா என்ற கண்ணன் (36), போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி (36), தேனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாலமுருகன், அல்லிநகரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (47) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், கிருபானந்த தயாநிதி, மணிமேகலை, தில்பிரசாத் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×