search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு ரெயில் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட காட்சி
    X
    சரக்கு ரெயில் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட காட்சி

    குறுவை சாகுபடி தீவிரம்- சரக்கு ரெயிலில் 1,300 டன் உரமூட்டைகள் திருச்சி வந்தன

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமடைந்ததையடுத்து சரக்கு ரெயிலில் 1,300 டன் உரமூட்டைகள் திருச்சி வந்தன.
    திருச்சி:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 15-ந் தேதி பிற்பகல் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு கல்லணை நோக்கி சென்றது.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலம் பாசன வசதி பெறும். காவிரியில் தண்ணீர் வரத்தின் காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கு ஆயத்தமாகி விட்டனர். விவசாயிகள் நாற்றாங்கால் பராமரித்து நெல் விதைத்திருந்தனர்.

    மேலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கான உழவாரப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, சாகுபடிக்கு முன்னதாக அடி உரமாக யூரியா, பொட்டாஷ் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயன்படுத்துவதுண்டு. மேலும் பயிர்கள் செழித்து வளர்வதற்கும் உரம் அவசியமாகும்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனையாளர்கள் உரமூட்டைகளை வரவழைத்துள்ளனர். அதன்படி, தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று 21 வேகன்களில் 1,300 டன் பொட்டாஷ், யூரியா உரமூட்டைகள் திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட்டிற்கு வந்தன. பின்னர், அவை சரக்கு ரெயிலின் வேகன்களில் இருந்து உடனடியாக லாரிகளில் ஏற்றப்பட்டு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதுபோல தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் 2,645 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் திருச்சி குட்ஷெட்டிற்கு வந்தது.

    அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்களால் லாரியில் ஏற்றப்பட்டு திருச்சி கே.கே.நகர் மற்றும் காஜாமலையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
    Next Story
    ×