search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்போக நெல் சாகுபடிக்காக உழவு செய்த வயல்வெளி காய்ந்த நிலையில் கிடப்பதை காணலாம்
    X
    முதல்போக நெல் சாகுபடிக்காக உழவு செய்த வயல்வெளி காய்ந்த நிலையில் கிடப்பதை காணலாம்

    கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடி பணிகள் பாதிப்பு

    தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    கம்பம்:

    தேனி மாவட்டத்தில், லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையுள்ள பகுதிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகும். இங்கு முல்லைப்பெரியாறு அணையின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி அணையில் இருந்து முதல்போக நெல் சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு கோடை மழை கைகொடுக்கவில்லை. தென்மேற்கு பருவமழையும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், அதுவும் தீவிரம் அடையவில்லை. மேலும் பெரியாறு அணையில் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

    ஜூன் 1-ந்தேதி இல்லாவிட்டாலும் முதல் வாரத்திலாவது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. நேற்று அணையின் நீர்மட்டம் 112.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உழவு செய்த வயல்கள் காய்ந்த நிலையில் கிடக்கிறது. மேலும் உழவு செய்து நாற்றங்கால் அமைக்காமல் முதல்போக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மாதம் இறுதிவரை இதே நிலைமை நீடித்தால் இருபோக நெல் சாகுபடியில், ஒரு போகம் கைவிடப்படும் சூழல் ஏற்படும். எனவே, மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். 
    Next Story
    ×