search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகே நத்தகளம் மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகே நத்தகளம் மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

    கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    துவாக்குடி:

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கீழகல்கண்டார் கோட்டை பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதாள சாக்கடைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக அதிகாரிகள் தரப்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டனர். மேலும் பல கட்ட போராட்டங்களும் ஏற்கனவே நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நத்தகளம் மீட்புக் குழுவினர் மஞ்சத்திடல் பாலம் அருகே திரண்டனர். பின்னர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து திருவெறும்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள நத்தகளத்தின் அருகே 150 ஆண்டு கால பழமையான அழகுநாச்சி அம்மன் கோவில் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு இடையூறாக அமைந்துவிடும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட யசோதா என்ற பெண், கையில் வேப்பிலையுடன் திடீரென சாமியாட தொடங்கினார். அவரை அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×