search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கமல்ஹாசன் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    வீரமரணம் எய்திய தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு தெலுங்கானா கவர்னர் - கமல்ஹாசன் இரங்கல்

    லடாக் எல்லையில் வீரமரணம் எய்திய தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆவார். இந்நிலையில் பழனியின் வீரமரணத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    லடாக் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு நாட்டிற்காக வீரமரணமடைந்த வீரரை இந்நாட்டிற்கு அளித்த பெருமை கொண்ட குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரமரணமடைந்த அவரது வீரமும், தியாகமும் என்றளவும் அனைவரின் மனதிலும் துதிக்கப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×