search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் குறைந்து காணப்படும் கொடைக்கானல் பழைய அணை.
    X
    நீர்மட்டம் குறைந்து காணப்படும் கொடைக்கானல் பழைய அணை.

    அணைகளின் நீர்மட்டம் சரிவு- கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    கொடைக்கானல் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அணையில் சுமார் 6 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் கொடைக்கானல் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே அப்சர்வேட்டரி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அணை உள்ளது. இந்த அணை மற்றும் மனோரஞ்சிதம் அணையின் மூலம் கொடைக்கானல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏரியின் அருகில் உள்ள கீழ் பூமி பகுதியை சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து ஆனந்தகிரி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதில் மனோரஞ்சிதம் அணை முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. பழைய அணையில் சுமார் 6 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் 2 அடி வரை வண்டல் மண் உள்ளதால் அங்கிருந்து குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    தற்போது அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது. இன்னும் சில மேடான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். அங்கு உள்ள மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொடுத்து அங்கிருந்து குடிநீரை எடுத்து வினியோகம் செய்ய வேண்டும். அதுவரை லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×