search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி
    X
    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

    கல்வராயன்மலையில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    கல்வராயன்மலையில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையின் அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணைக்கு மழைக்காலங்களில் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் காட்டாற்று வழியாக தண்ணீர் வரும். கோமுகி அணையின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பொதுமக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும் கோமுகி அணை உள்ளது.

    இந்த நிலையில் அணைக்கு தண்ணீர் வரும் வழியில் கைக்கான் வளவு என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே ரூ.160 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டி சேலம் மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட அமைப்பு குழுவை சேர்ந்த கஜந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சவுரிராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    கல்வராயன்மலையில் உள்ள காட்டாற்றில் தடுப்பணை கட்டினால், மழைக்காலங்களில் கோமுகி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வராது.

    இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய பணிகள் பாதிக்கும். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே காட்டாற்றில் தடுப்பணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி 25-க்கும் மேற்பட்டவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×