search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வெறிநாய்
    X
    வெறிநாய்

    திருப்பூரில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம்

    திருப்பூரில் வெறிபிடித்த நாய் கடித்ததில் 5 வயது சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வாலிபாளையம், போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அப்பகுதியில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. 10-க்கும் மேற்பட்ட நாய்கள் இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும் அப்பகுதியில் போவோர் வருவோரையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் துரத்தி குலைத்து அச்சுறுத்தி வருவது நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை வாலிபாளையம் பகுதியில் ஒரு நாய் வெறிபிடித்து அப்பகுதியில் போவோர் வருவோரை பார்த்து குலைத்துக் கொண்டே இருந்தது. இதனால் அச்சம் அடைந்தவர்கள் அந்த நாயிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடினர். நேற்று மாலை அதன் அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் வாலிபாளையம், யூனியன் மில் ரோடு, கே.பி.என் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெறிபிடித்து திரிந்த அந்த நாய் பலரை மாறிமாறி கடிக்கத்தொடங்கியது. இதனால் அச்சமடைந்து பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். நாயின் அட்டகாசத்தை கண்ட அங்கிருந்த சிலர் கட்டை மற்றும் கற்களை எடுத்துக் கொண்டு அந்த நாயை விரட்டத் தொடங்கினர். வீதிவீதியாக ஓடிய அந்த நாய் இளைஞர்களின் கையில் சிக்காமல் போக்கு காட்டியது.

    மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் அந்த நாயை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பிடித்தனர். வெறிபிடித்த இந்த நாய் கடித்ததில் 5 வயது சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திருப்பூரில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×