search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள்
    X
    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள்

    தண்டவாளத்தில் மண் சரிவு: சீரமைக்கும் பணி 2-வது நாளாக தீவிரம்

    இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்தது.
    அழகியமண்டபம்:

    குமரி மாவட்டத்தில் இரணியல் ரெயில்நிலையம் அருகில் உள்ள தெங்கன்குழி பகுதியில் தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் -திருவனந்தபுரம் வழித்தடத்தில் பார்சல் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, தண்ட வாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணை அகற்றி, மணல் மூடைகளை அடுக்கி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே தண்டவாளத்தில் மண்சரிவால் ராமலெட்சுமி என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. மேலும், வீட்டின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது.

    மண்சரிவு ஏற்பட்ட பகுதியை நேற்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, கல்குளம் தாசில்தார் ஜெகதா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், சீரமைப்பு பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர். அப்போது, தெங்கன்குழி ஊர் தலைவர் பத்மதாஸ், வீடு சேதம் அடைந்த ராமலெட்சுமிக்கு நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுத்தார். அதை பரிசீலிப்பதாக சப்-கலெக்டர் கூறினார். மேலும், அப்பகுதியில் மழை பெய்தால் சேதம் அடைந்த வீடு இடிந்து விழும் என்பதால் ராமலெட்சுமியை மாற்று இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

    சீரமைப்பு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தற்காலிகமாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்த பணிகள் நாளை(இன்று) நிறைவடையும் என்று கூறினார்கள்.
    Next Story
    ×