search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வார்டில் முழு கவசஉடை அணிந்து வலம் வந்த கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
    X
    கொரோனா வார்டில் முழு கவசஉடை அணிந்து வலம் வந்த கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

    ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்

    கொரோனா வார்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
    சென்னை:

    தெலுங்கானா மாநில கவர்னராக பணியாற்றி வரும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது அசாத்திய நடவடிக்கைகள் மூலம் தெலுங்கானா மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, இடர்பாடான நேரத்திலும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவதற்காக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த சம்பவம் நடந்திருக்கிறது.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரை மருத்துவ குழு வரவேற்று ஆஸ்பத்திரிக்கு உள்ளே அழைத்து சென்றது. அங்கு முக கவசம், கையுறை உள்ளடக்கிய முழு கவச உடை அணிந்து கொண்டு, கொரோனா நோய் தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சந்திக்க சென்றார்.

    கொரோனா வார்டில் ஒவ்வொரு அறையாக சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவோரிடம், ‘கவலைப்பட வேண்டாம் விரைவில் குணமடைவீர்கள். வேகமாக குணமடைந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாருங்கள்’ என்றார்.

    அதனைத்தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம், கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரை துச்சமென மதித்து சேவையாற்றும் உங்களது பணி மகத்தானது. உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே நான் வந்தேன், என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கொரோனா வார்டுக்கு கவர்னரே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×