search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கற்கள் மழையால் சேதமடையாமல் இருக்க பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது
    X
    செங்கற்கள் மழையால் சேதமடையாமல் இருக்க பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது

    மார்த்தாண்டம் பகுதியில் செங்கல் தொழில் கடும் பாதிப்பு

    மார்த்தாண்டம் பகுதியில் செங்கல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கில் தளர்வு இருந்தும், மழையால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
    குழித்துறை:

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் அவ்வப்போது அரசு அளிக்கும் தளர்வுகளின் படி தொழில்கள் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, செங்கல் சூளை தொழிலுக்கும் தளர்வு அளிக்கப்பட்டதின் பேரில், கடந்த மாதம் 5-ந்தேதி முதல் செங்கல் உற்பத்தி நடந்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர்களை முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவை ஒட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக குமரி மேற்கு மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குழித்துறை, களியக்காவிளை, கொல்லங்கோடு, புதுக்கடை, தேங்காப்பட்டணம் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அத்துடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மார்த்தாண்டம் பகுதியில் செங்கல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குமரி மேற்கு மாவட்டத்தில் மார்த்தாண்டம், ஞாறான்விளை, திக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. அவற்றில் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் குறைந்த அளவு உள்ளூர் தொழிலாளர்களை வைத்து செங்கல் தொழில் நடந்து வந்தது.

    மேலும் ஊரடங்கு தொடர்வதால், கேரளாவுக்கு செங்கற்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குமரி மாவட்ட மக்களின் பொருளாதார வீழ்ச்சியால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இந்தநிலையில் தற்போது மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் செங்கல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களை மழையில் இருந்து பாதுகாப்பது பெரும் வேலையாக உள்ளது. இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடி பாதுகாத்து வருகிறார்கள். அதையும், தாண்டி சில செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது.

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தி தொழிலுக்கு தளர்வு இருந்த போதிலும், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் மீள முடியாமல் செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், தொழிலாளர்கள் வேலை இழந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
    Next Story
    ×