search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தேனியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    தேனியில் ஆற்றங்கரைப் பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கவும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    இதனால், ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாவலர்களின் துணையின்றி ஆற்றங்கரை பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக்கூடாது.

    மாவட்டத்தில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திடவும், வெள்ளம் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிவாரண முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னெச்சரிக்கையாக செய்திடவும், பொதுமக்கள் வெள்ளம் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்திட மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆற்றங்கரைப் பகுதிகளில் தேவையான இடங்களில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×