search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம்- பொருட்கள் திருட்டு

    பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த இந்திரா நகர் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது49). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    நேற்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே மேஜையில் பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சில பொருட்கள் திருடுபோய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி எதிர்ப்புறம் ரோஸ்நகர் முகப்பு பகுதியில் மணி(54) என்பவர் நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு மணி கடையை பூட்டி விட்டு கடையின் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு 1.30 மணி அளவில் கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்து சத்தம் போட்டுள்ளார். மணி வருவதை அறிந்த அந்த மர்மநபர் சிறிய கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டார். மேலும் மணியின் கடை முன்பு சில்லரை நாணயங்களும், நாணயங்கள் வைக்கும் டப்பாவும் கீழே சிதறி கிடந்தன. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசில் மணி புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மணியின் கடையில் பூட்டை உடைக்க முயற்சித்தவரின் உருவம் கடையின் எதிரே உள்ள தனியார் பள்ளியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒல்லியான உருவம் கொண்ட நபர் கைலி, வெள்ளைச்சட்டையுடன் உள்ளார். பூட்டை உடைக்க முயற்சித்த பதிவை போலீசார் துப்பாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 2 கடைகளிலும் தடயங்களை சேகரித்தனர்.

    ஒரே சாலையில் நடந்த இந்த சம்பவங்களில் ஒரே மர்மநபர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், மளிகை கடையில் திருடிய நாணயங்களை மணியின் கடையில் திருட முயற்சித்தபோது அந்த நபர் சிதறவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    நகரின் முக்கிய சாலை பகுதியில் உள்ள சில கடைகளில் கொரோனா ஊரடங்கு நேரத்தின்போது திருட்டுகள் நடந்துள்ளதால், அந்த சம்பவங்களிலும், தற்போது நடந்துள்ள திருட்டு மற்றும் திருட முயற்சித்த சம்பவங்களிலும் ஒருவரே ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×