search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேட்டுப்பாளையத்தில் மாயமான கார் டிரைவர் கொலையில் 3 பேர் கைது

    மேட்டுப்பாளையத்தில் மாயமான கார் டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 54). இவர் சொந்தமாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். இவரது மனைவி கீதா (52). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த மார்ச் 24-ந் தேதி சண்முகசுந்தரம் கார் ஸ்டாண்டுக்கு போய் விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். பின்னர் பெருந்துறை வாடகைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் சண்முக சுந்தரம் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சண்முக சுந்தரத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது செல்போனில் பேசிய ஒருவர் சங்ககிரி டோல்கேட் அருகே செல்போன் கிடந்ததாக கூறினார்.

    தனது கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கீதா மேட்டுப்பாளையம் போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் சண்முக சுந்தரத்தின் காரை வாடகைக்கு பேசி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவரை சேலம் சங்ககிரி மலைப் பகுதியில் உள்ள காட்டில் வைத்து கொலை செய்து உடலை எரித்து விட்டதாகவும் தெரிவித்தனர். அவரின் காரை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்று விட்டதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து சங்ககிரி போலீசார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. மணி ஆலோசனையின்படி மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் டிரைவர் சண்முகசுந்தரம் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் போலீசார் இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×