search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதமடைந்த சாலை (கோப்பு படம்)
    X
    சேதமடைந்த சாலை (கோப்பு படம்)

    சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடுரோட்டில் படுத்து எம்.எல்.ஏ. போராட்டம்: போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு

    சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடுரோட்டில் படுத்து எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குமரி மாவட்டம் கரும்பாட்டூர் பஞ்சாயத்தில் கரும்பாட்டூர் ரேஷன் கடைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. இதை சீரமைக்க அகஸ்தீஸ்வரம் யூனியன் பொதுநிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலை சீரமைக்கும் பணி நேற்று காலை தொடங்குவதாக இருந்தது. இதனை அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. பழுதான சாலை பகுதிக்கு வந்தார். ஏராளமான தி.மு.க.வினரும், அந்த பகுதி மக்களும் அங்கு வந்தனர்.

    தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். வேறொரு நாளில் சாலைப்பணியை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டதற்கு, எம்.எல்.ஏ. தரப்பில் உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்த விவகாரத்தால் திடீரென எம்.எல்.ஏ. உள்பட அங்கு திரண்டு நின்றவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை. உடனே போலீசார் நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்ய போகிறோம் என்றனர்.

    உடனே ஆஸ்டின் எம்.எல்.ஏ. சாலைப்பணியை தொடங்க வேண்டும் என்று கூறி நடுரோட்டில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை எழுந்திருக்கும்படி கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துபடி இருந்தார். உடனே போலீசார், எம்.எல்.ஏ.வை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 14 பேரையும் கைது செய்தனர். கைது செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்தாமரைகுளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    Next Story
    ×