search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவி
    X
    திற்பரப்பு அருவி

    குமரியில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதையடுத்து குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவிலில் நேற்று காலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்தது. இரவும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் ரோடுகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். புத்தேரி, பார்வதி புரம், வெட்டூர்ணி மடம், செட்டிக்குளம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இரணியலில் இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 88 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு முதலே மழை பெய்தது. இன்று காலையில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    சிற்றாறு அணை நிரம்பி வருவதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்துக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    வள்ளியாறு, பரளியாறு, பழையாறு, கோதையாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாசன குளங்களில் வெள்ளம் பெருக தொடங்கி உள்ளது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.40 அடியாக இருந்தது. அணைக்கு 966 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.15 அடியாக இருந்தது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.33 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.44 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 51.10 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 3.70 அடியாக உயர்ந்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக தோவாளை, திருவட்டார் தாலுகாவில் தலா 2 வீடுகளும், கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் தலா 1 வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-28.2, பெருஞ்சாணி-21.4, சிற்றாறு-1-40, சிற்றாறு-2-32, மாம்பழத்துறையாறு-77, திற்பரப்பு-37.4, புத்தன் அணை-72, நிலப்பாறை-60, இரணியல்-88, ஆணைக்கிடங்கு-83, குளச்சல்-24.8, குருந்தன்கோடு-83.4, அடையாமடை-29, கோழிப்போர் விளை-70, நாகர்கோவில்-79.4, சுருளோடு-24.2, பாலமோர்-30.6, மயிலாடி-64.2, கொட்டாரம்-14.2.

    Next Story
    ×