search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத்தேர்வு
    X
    பொதுத்தேர்வு

    பொதுத்தேர்வு எழுத வரும் 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வு வருகிற 16-ந்தேதியும், மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 18-ந்தேதியும் நடக்கின்றன.

    இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லவும், மீண்டும் வீட்டிற்கு வரவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

    அதுபோல் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அந்த பேருந்தில் பயணிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.   இதற்காக முதன்மை கல்வி அலுவலர்கள் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநரை தொடர்பு கொண்டு பேருந்து தேவைப்படும் மாணவர்களின் விவரங்களை வரும் 8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களிடம் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். அது போல் தேர்வு பணிக்கு வரும் ஆசிரியர்களும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். பேருந்து குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×