search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு

    ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

    மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் ஐ.நா.நல்லெண்ண தூதராக மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்.

    நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
    Next Story
    ×