search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.55¾ லட்சம் கையாடல்- 5 பேர் கைது

    வாடிக்கையாளர்கள் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.55¾ லட்சம் கையாடலில் ஈடுபட்ட தனியார் வங்கி மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பிரகாஷ்நகரில் ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் என்ற தனியார் வங்கி ஒன்றின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு திருவானைக்காவல் வெங்கடேசாநகரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 32) மேலாளராகவும், நகை மதிப்பீட்டாளராக பாலசுப்பிரமணியனும் பணியாற்றி வந்தனர். இந்த வங்கியில் அடகு வைக்கும் நகைகளை 3 மாதத்திற்கு பின்னர் திருப்ப வேண்டும் அல்லது வட்டியை செலுத்திவிட்டு மறு அடகு வைக்க வேண்டும். 3 மாதத்திற்கு மேலாகி நகையை திருப்ப முடியாத வாடிக்கையாளர்கள் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரிடம் கூறி மறு அடகு வைப்பது வழக்கம்.

    அப்போது, வாடிக்கையாளர்களிடம் விண்ணப்பங்களில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு, மற்ற ஊழியர்கள் உதவியுடன் மேலாளரும், நகைமதிப்பீட்டாளரும் மறு அடகு வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நகை மதிப்பீட்டாளர் பாலசுப்பிரமணியம் வேறு கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக செவந்திலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    புதிய நகை மதிப்பீட்டாளர் செவந்திலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான நகை அடமான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வங்கியில் 80 வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகைகள் கவரிங் நகை என கண்டறியப்பட்டது.

    விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் பாலசுப்பிரமணியன், வங்கி மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வங்கி ஊழியர்கள் யோகராஜ் (29), வடிவேல் (31) ராஜேஷ் (25) மற்றும் சிலம்பரசன் (24) ஆகியோர் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி, கவரிங் நகைகளை தங்க நகை என்று அடகு வைத்து ரூ.55 லட்சத்து 86 ஆயிரத்து 116 கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த பணத்தை மீட்டு தரும்படி, புதிதாக பொறுப்பேற்ற கிளை மேலாளர் டால்வின்ஜோஸ்ராஜ் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நகை மதிப்பீட்டாளர் பாலசுப்பிரமணியன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரை தவிர்த்து, கையாடலில் ஈடுபட்ட முன்னாள் வங்கி மேலாளர் பிரவீன்குமார், ஊழியர்கள் யோகராஜ், வடிவேல், ராஜேஷ், சிலம்பரசன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கிற்கு ஆதாரமான கவரிங் நகைகளும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×