search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் வழித்தடத்தில் திருப்பூர் செல்ல பஸ் ஏறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்
    X
    கரூர் வழித்தடத்தில் திருப்பூர் செல்ல பஸ் ஏறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்

    திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு

    தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பஸ்களில் ஏறினார்கள்.
    திருச்சி:

    ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வினை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 34 பயணிகளுக்கு மேல் பயணிக்க அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பஸ்கள் இயக்கப்பட்ட முதல் 3 நாட்கள் பயணிகள் குறைந்த அளவில் மட்டுமே பயணம் செய்தனர். மாநகர பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் காணப்பட்டது. மற்ற நேரங்களில் அனைத்து இருக்கைகளும் காலியாகவே இருந்தன.

    இந்தநிலையில் திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் போன்ற வெளி மாவட்டங்களில் உள்ள பனியன், கொசுவலை, ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்கள் இ-பாஸ் பெற்று வேலைக்கு செல்லத்தொடங்கி உள்ளனர்.

    இதனால் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கரூர், சேலம் போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதன்காரணமாக அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பஸ்களில் ஏறினார்கள். ஆனால் பஸ்கள் மண்டல எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

    குறிப்பாக திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாத்தலை வரை இயக்கப்படும் பஸ்களில் ஏறினார்கள். இதேபோல் சேலம் செல்லும் பயணிகள் திருச்சி மாவட்ட எல்லையான மேய்க்கல்நாய்க்கன் பட்டி வரை செல்லும் பஸ்களிலும், மதுரை செல்லும் பயணிகள் மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி வரை செல்லும் பஸ்களிலும், திண்டுக்கல் பயணிகள் மாவட்ட எல்லையான வையம்பட்டி வரை இயக்கப்படும் பஸ்களிலும் ஏறினார்கள்.

    பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக பயணிகளின் கைகளில் கிருமிநாசினியை கண்டக்டர்கள் தெளித்து சுத்தம் செய்ய வைத்தனர். புறநகர் பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர். ஆனால் நகர பஸ்களில் பயணம் செய்த பலர் முக கவசம் அணியாமல் இருந்ததை காண முடிந்தது. அவர்களை கண்டக்டர்கள் எச்சரித்து, முக கவசம் அணிய வைத்தனர்.
    Next Story
    ×