search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    பாலைவன வெட்டுக்கிளிகளை கண்காணிக்க குழு அமைப்பு- கலெக்டர் தகவல்

    தேனி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி, மாவட்ட வன அலுவலர், தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர். வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ஆகியோரை உறுப்பினராக கொண்டு கண்காணிப்பு குழு தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்குழு பாலை வன வெட்டுக்கிளிகள் வருகையை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் பாலை வன வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து அண்டை மாநிலங்களில் உள்ள வேளாண்மைத்துறை வாயிலாகவும் தொடர்ந்து தகவல்களை பெற்றிட அறிவுறுத்தப்பட்டது.

    அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளி ஊடுருவல்ஏற்படுமாயின் அதனை உடனடியாக எதிர்கொள்ளும் பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட உயிரிப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மருந்து தெளிப்பதற்கு தேவையான உபகரணங்களை போதுமான அளவு இருப்பு வைக்க மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டதால் சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.

    விவசாயிகள் வயல் அளவில் வெட்டுக்கிளி கூட்டங்கள் தென்பட்டால் டின்கள் அல்லது டிரம்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கலாம். முதலில் அசாடிராக்டின் என்னும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவரப்பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

    பரந்த அளவில் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில் மாலத்தியான் 96 சதம் பூச்சி மருந்தை மத்திய அரசிடமிருந்து பெற்று வேளாண்மைத்துறை மூலம் ஒட்டுமொத்த முறையில் தீயணைப்பு எந்திரம் மூலம் கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

    இருப்பினும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை துறைக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×