
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடிக் கிடக்கிறது. அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை.
வைகாசி விசாக திருநாளான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது.
எனினும் கொரோனா ஊரடங்கால், பக்தர்களை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கோவில் வளாகம், கடற்கரை வெறிச்சோடியது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.