search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
    X
    தேன்கனிக்கோட்டையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    யானை தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலி : வனத்துறையை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியல்

    யானை தாக்கி இறந்த அ.தி.மு.க. பிரமுகரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும், வனத்துறையை கண்டித்தும் கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்ன பூதுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா (வயது 55). விவசாயி. மேலும் அ.தி.மு.க. பிரமுகராகவும் இருந்தார். இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நொகனூர் வன சரகத்துக்குட்பட்ட பகுதியில் அவர் ஆடுகளை மேய்க்க சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்னப்பாவை தேடி வனப்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது வனப்பகுதியில் யானை தாக்கி சென்னப்பா இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சென்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்கி தொடர்ந்து உயிர் இழப்பு சம்பவம் நடப்பதை கண்டித்தும், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும், யானைகள் நடமாட்டத்தை தடுக்க கோரியும், வனத்துறையை கண்டித்தும் கிராமமக்கள் தேன்கனிக்கோட்டை வன சோதனைச்சாவடி அருகில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், மாநில விவசாய சங்க துணை தலைவர் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் பூதட்டியப்பா உள்பட ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சாலைமறியல் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு, தாசில்தார் ராமசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன், வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். யானை தாக்கி இறந்த சென்னப்பாவின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×