search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரல்வாய்மொழி சோதனைசாவடி
    X
    ஆரல்வாய்மொழி சோதனைசாவடி

    குமரிக்கு மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்

    குமரிக்கு பஸ்சில் வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி தனியார் கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    குமரிக்கு பஸ்சில் வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி தனியார் கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் குமரி மாவட்டத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்கள் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு இயக்கப்பட்டன. மேலும் அந்த மாவட்டங்களில் இருந்து குமரிக்கு பஸ்சில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அதன்படி குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் அதிகாரிகளுடன், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்கு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் நேராக அந்த கல்லூரி வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அதில் வந்த பயணிகளின் பெயர் விவரம் அங்கேயே சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிந்ததும், பயணிகள் பஸ்சில் ஏறி நாகர்கோவிலுக்கு சென்றனர்.

    நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் நேற்று என்ஜினீயரிங் கல்லூரிக்கு வந்து கொரோனா பரிசோதனை சிறப்பு மையத்தில் பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிப்பதை பார்வையிட்டார். நேற்று காலையில் இருந்து மாலை 4 மணி வரை 300 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

    அதே சமயம் வெளி மாவட்டங்களில் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து சோதனை நடத்தப்பட்டது. அவ்வாறு சோதனை செய்யும் போது, வாகனத்தில் வருபவர்கள், வள்ளியூர் மற்றும் நாங்குநேரியில் இருந்து வருவதாக கூறி வந்தனர். இதனால் அவர்கள் உண்மையிலேயே எங்கிருந்து வருகிறார்கள் என்பதை கண்டறிய, ஆதார் அட்டை அவசியம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர். ஆதார் அட்டையுடன் வருபவர்களை மட்டுமே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள். இதனால் கார்-மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளானதை காண முடிந்தது.
    Next Story
    ×