search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோணாமேடு பகுதியில் மருத்துவக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்
    X
    கோணாமேடு பகுதியில் மருத்துவக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்

    வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவிய பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவிய பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வந்த வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று காலை கொரோனா தொற்று பரிசோதனையை மருத்துவர் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்து அவர்களை தனிமைப்படுத்தினர்.

    இரு பெண்கள் வசித்து வந்த தெருக்களில் உள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பகுதிகளில் முக்கிய பாதைகள் சீல் வைத்து மூடப்பட்டன. அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று காலை கோணாமேடு, உதயேந்திரம் பகுதிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் மருத்துவக் குழுவினருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நகராட்சி ஆணையாளர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் சற்குணம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாணியம்பாடி, உதயேந்திரம் பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்று பரவி சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நோய் தொற்று இல்லாத பகுதியாக வாணியம்பாடி இருந்தது. தற்போது சென்னையில் இருந்து வந்தவர்களால் மீண்டும் கொரோனா தொற்று பரவியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×