search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம்
    X
    குற்றாலம்

    குற்றாலத்தில் சீசன் தொடங்கியது- குளிக்க அனுமதி இல்லை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    நெல்லை:

    கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பாபநாசம், சேர்வலாறு அணைப்பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும், களக்காடு மலைப்பகுதியில் 2.2. மி.மீ. மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.4. மி.மீ. மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    செங்கோட்டையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் தலா 3 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக இன்று குற்றால பகுதிகளில் சாரல் மழையுடன், குளுமையான கால நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இன்று மெயினருவியிலும், ஐந்தருவியிலும் பரவலாக தண்ணீர் விழுந்தது. கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சில கடைகள் மட்டும் திறந்துள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் அருவிகளை பார்த்து செல்கிறார்கள். சிலர் கால்வாய்களில் குளித்து வருகிறார்கள்.

    வழக்கமாக குற்றால சீசனையொட்டி மெயினருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அமைக்க ஏலம் விடப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு பேரூராட்சி சார்பில் குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் ஏலம் விடப்படாததால் பேரூராட்சிக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வறண்டு கிடந்த பாபநாசம் அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 35.95 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அங்கிருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக வினாடிக்கு 325 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 71.20 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    Next Story
    ×