search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    கலெக்டர் சந்தீப் நந்தூரி

    இலங்கையில் சிக்கி தவிக்கும்700 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் நாளை தூத்துக்குடி வருகை

    இலங்கையில் சிக்கி தவிக்கும் 700 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
    தூத்துக்குடி:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.

    அவ்வாறு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு ‘வந்தே பாரத்’ இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இலங்கையில் தவித்து வரும் இந்தியர்கள் சுமார் 1,200 பேர் இந்தியாவுக்கு திரும்புவதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து உள்ளனர். அவர்களை மீட்டு வருவதற்காக ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ இலங்கையில் இருந்து சுமார் 700 பேரை ஏற்றிக் கொண்டு, இலங்கை கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) புறப்படுகிறது.

    அந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வந்தடைகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கரித்தளம் பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்படுகின்றனர். அங்கிருந்து பஸ்கள் மூலம் பயணிகள் முனையத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு உடல் வெப்ப பரிசோதனை நடக்கிறது. தொடர்ந்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அதன்பிறகு மாவட்டம் வாரியாக பயணிகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதைத்தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் வ.உ.சி. துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கப்பலில் வரும் பயணிகள் இறங்கும் இடங்கள், பின்னர் பஸ்கள் மூலம் அழைத்து சென்று காத்திருப்பு அறையில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் இடம், உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் இடம் மற்றும் கருவியின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கவும், தேவையான குப்பை தொட்டிகளை பயன்பாட்டுக்கு வைத்து இருக்கவும், கை கழுவதற்கு ஏதுவாக உரிய கைகழுவும் இடங்களை தற்காலிகமாக அமைக்கவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் வரிசையாக வருவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும், கூடுதலாக பணியாளர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின், பயணிகளை அழைத்து செல்ல பஸ்கள் வெளியில் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். தேவையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) எம்.பிரித்திவி ராஜ், துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார், முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் சுரேஷ் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சங்கர நாராயணன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், துறைமுக துணை பாதுகாவலர் பிரவீன்குமார் சிங், போக்குவரத்து மேலாளர் பிரபாகர், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் மிஸ்ரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×