search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சியில் ஊரடங்கு தளர்வால் அலட்சியம்: கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குவியும் பொதுமக்கள்

    கம்பரசம்பேட்டை தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக குழந்தைகளுடன் வருகிறார்கள். இதுவும் கொரோனா பரவலை எளிதாக்கி விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகரில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் பொதுமக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைக்காகவும் மட்டும் வெளியே வந்தனர். அதில் சிலர் விதிகளை மீறியதால் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், அபராதமும் விதித்தனர்.

    கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்தது. தற்போது ஊரடங்கில் பல் வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கட்டுப்பாடுகளுடன் வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

    குறிப்பாக குழந்தைகள் வீடுகளுக்குள் முடங்கியே கிடந்ததால் அவர்களை பொழுது போக்கிற்காக வெளியே அழைத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். திருச்சி மாநகரில் பொழுது போக்கும் இடங்களாக முக்கொம்பு, வண்ணத்து பூச்சி பூங்கா போன்ற இடங்கள் உள்ளது.

    அங்கு செல்ல அனுமதி அளிக்கப்படாததால் பொது மக்கள் பலர் தங்களது குழந்தைகளை திருச்சி காவிரி பாலத்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதுடன், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சற்று காற்று வாங்கி விட்டு வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

    திருச்சி மாநகரில் தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவில் ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. ஆனால் காவிரி பாலத்தில் பொதுமக்கள் குவிந்து வருவதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதேபோல் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக குழந்தைகளுடன் வருகிறார்கள். இதுவும் கொரோனா பரவலை எளிதாக்கி விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களா? என்று ஆய்வு செய்வதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×