search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம புறங்களில் வேகமாக பரவிவரும் கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப கால கட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 12 பேர் குணமாகி, 3 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் மே மாதத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்பகுதியில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

    ஆனால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கிராம புறங்களில் அதிகமாக கொரோனா பரவியுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவ்வாது மலை கிராமங்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கிராமபுறங்களில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரையும் குறி வைத்து தாக்கியுள்ளது.

    திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டியாங்குப்பம், பாப்பம்பாடி, மல்லவாடி, இசுக்கழி காட்டேரி, சு.நல்லூர், மெய்யூர், தேனிமலை, செய்யாறு நாவல்பள்ளம், சமத்துவபுரம் பாண்டியபுரம், கோனேரிகுடிசை, ஓடமங்கலம் , அத்திப்பட்டு, மேலமரத்தூர் ஜெடயனூர், தீர்த்தனூர்,கோவிலூர்.

    அதேபோல் தண்டராம்பட்டு, சாத்தனூர், கரிக்கலாம் பாடி,போளூர் எலிச்சம்பட்டு, மொரப்பந்தாங்கல், கொசப்பாளையம், கோட்டை காலனி, கலசப்பாக்கம் மேல்சோழங்குப்பம், ஆண்டியாபாளையம், மாமண்டூர், ஆரணி கொசப்பாளையம், மேல்வந்தவாடி, காந்தபாளையம், மலப்பாம்பாடி, படவேடு, நீப்பந்துறை, வேட்டவலம், புளியம்பட்டி, ஓலைப்பட்டி, நரியங்குறிச்சி, மோத்தக்கல், காரப்பட்டி, கீழ்கொடுங்காலூர், பெருங்களத்தூர் உள்பட சுமார் 50 கிராமங்களில் கொரோனா பரவியுள்ளது.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் வேலூரில் இருந்து தினமும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணிக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் 95 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.சென்னையில் இருந்து வந்தவர்கள் 125 பேர், மும்பையில் இருந்து வந்தவர்கள் 103 பேர், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர், மற்றமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 24 பேர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்ட கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நகர பகுதியில் தங்கி தொழில் செய்து வந்தனர்.

    அவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்களால் தான் கிராம புறங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×