search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 260 போலீசார்

    சென்னை காவல்துறையில் கொரோனாவில் இருந்து மீண்டு 260 போலீசார் பணிக்கு திரும்பினர். அனைவரும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையங்களிலேயே பணிகளை தொடங்கி உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் போலீசாரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. கடைநிலை காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்ணாநகர் துணை கமி‌ஷனர் முத்துசாமி, தி.நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமார் ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினர். அவர்களை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.

    எஸ்பிளனேடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலமும் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினார். அவரையும் கமி‌ஷனர் வரவேற்றார்.

    சென்னை காவல் துறையில் 275 போலீஸ் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், உதவி கமி‌ஷனர்கள் ஆகியோரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

    இவர்களில் பெரும்பாலானோர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 260 போலீசார் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அனைவரும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையங்களிலேயே பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் ஆயுதப்படை போலீசார் 60 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணியை தொடங்க உள்ளனர். எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 60 போலீசாரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

    காவல்துறையின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காவலர்களுக்கு அதிகம் பரவத்தொடங்கிய பிறகு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

    கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரை கண்காணிக்க காவல் துறையில் சிறப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

    இதற்கிடையே டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய மேலும் 4 போலீசாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசாருக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் சிலருக்கும், தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தவர்களும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்தநிலையில் தான் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது டி.ஜி.பி. அலுவலக ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×