search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் கொரோனா மையங்களாக மாறும் 47 கல்லூரிகள்

    சென்னையில் கொரோனா பாதிப்பு 8 மண்டலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 47 கல்லூரிகளை புதிதாக கொரோனா மையங்களாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளை தாண்டி பல்வேறு கல்லூரிகள், அரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவையும் கொரோனா மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

    சென்னையில் இன்று வரை 13 ஆயிரத்து 362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகர், அண்ணாநகர், ராயபுரம், தண்டையார் பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

    கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதலாக கொரோனா மையங்களை ஏற்படுத்தி அதில் படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டிய கட்டாயம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி

    கொரோனா பாதிப்பு 8 மண்டலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதால்  அதிகாரிகள் 47 கல்லூரிகளை புதிதாக கொரோனா மையங்களாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

    இந்த கல்லூரிகளில் 12 ஆயிரத்து 657 படுக்கைகள் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 28 தனியார் இடங்களிலும், 19 அரசு அலுவலக கட்டிடங்களிலும் கொரோனா மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் போடப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

    சென்னை புளியந்தோப்பு கேசவப்பிள்ளை பூங்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

    இந்த மையத்தில் 1728 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதுதயாராகி விட்டால் சென்னையிலேயே மிகப்பெரிய கொரோனா மையமாக இது இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை சிட்டி சென்டரிலும் கொரோனா மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1495 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். தற்போது வரை இந்த மையமே பெரிய மையமாக உள்ளது.

    சிட்டி சென்டரில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 463 பேர் ஓரளவுக்கு குணமானவுடன் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் 289 கொரோனா நோயாளிகளும், சென்ட் ஜோசப் கல்லூரியில் 251 நோயாளிகளும், சென்னை ஐ.ஐ.டி.யில் 209 பேரும், டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் 183 பேரும், லயோலா கல்லூரியில் 113 பேரும் தற்போது கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×