search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தென்னை மரங்கள் சாய்ந்தன (கோப்புப்படம்)
    X
    சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தென்னை மரங்கள் சாய்ந்தன (கோப்புப்படம்)

    கோவை, திருப்பூரில் சூறாவளி காற்றுடன் கனமழை- 100 மரங்கள் சாய்ந்து விழுந்தன

    கோவை, திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், ரெயில்நிலையம், பாப்பநாயக்கன்பாளையம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அவினாசி மேம்பாலம், லங்கா கார்னர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர். தொடர்மழை காரணமாக பீளமேடு பகுதியில் உள்ள காந்திநகரில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சூலூர் திருச்சி சாலையில் உள்ள கம்போடியாவின் காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் இருந்த வேப்ப மரம் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல பள்ளபாளையம் பகுதியில் மரம் மின்கம்பங்களில் மீது விழுந்தது. பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் மின்சாரம் தடைபட்டது. இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.

    கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சாலையோரம் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடங்களில் வீடுகளில் வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் விநாயகர் கோவில் முன்பு இருந்த மரம், ராயர் பாளையம் பகுதியில் விநாயகர் கோவில் அருகில் இருந்த அரச மரம் விழுந்து சுற்றுச்சுவர் சேதமானது. மேலும் சோமனூர் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது பயிர்கள் சேதமானது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, நெல்லித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு 45 மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மரும் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அவினாசி அருகே உள்ள எம்.நாதம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

    இதனால் இ.சி.காலனி, காமராஜர் வீதி, இஸ்மாயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் மின்சாரம் தடைபட்டு அந்த பகுதிகளில் இருளில் மூழ்கின.

    தொடர்ந்து இன்று காலை வரை மின்சாரம் வராததால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு அந்த பகுதியில் தோட்டத்தில் பயிரிட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

    இதேபோல் பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை, திருப்பூரில் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

    தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-35, அன்னூர்-29, மேட்டுப்பாளையம்-20, சின்கோனா-11, சின்ன கல்லார்-25, வால்பாறை பி.ஏ.பி-59, வால்பாறை தாலுகா-58, சோலையார்-12, ஆழியார்-3, சூலூர்-50.2, பொள்ளாச்சி-3.4, கோவை தெற்கு-19. கோவை மாவட்டத்தில் மொத்தம் 370,70 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சூலூர்-59,2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஊட்டி-13, நடுவட்டம் -32, கிளெண்மார்கன்-23, மசினகுடி-20, குந்தா-16, அவலாஞ்சி-15, எமரால்ட்-10, கெத்தை-16, கிண்ணக்கொரை-16, பாலாகுளா-8, குன்னூர்-24, குன்னூர் ரூரல்-3.5, கேத்தி-11, பர்லியாறு-66, கோத்தகிரி-12.5, கொடநாடு-43, கீழ்கோத்தகிரி-23, கூடலூர்-11, தேவாலா-6, அப்பர் கூடலூர்-10, ஓவேலி-8. மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் 421 மி.மீ. மழை பெய்தது.

    Next Story
    ×