search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விரிவாக்க பணிக்காக மாரியம்மன் கோவில் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.
    X
    சாலை விரிவாக்க பணிக்காக மாரியம்மன் கோவில் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.

    விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக புத்துவாழி மாரியம்மன் கோவில் அகற்றம்

    விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக புத்துவாழி மாரியம்மன் கோவில் அகற்றப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நான்குமுனை சந்திப்பில் இருந்து கோலியனூர் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களை அப்புறப்படுத்தவும் முடிவு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதற்காக சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகள், கோவில், தேவாலய நிர்வாகத்தினருக்கு நோட்டீசு அனுப்பினர். இருந்தபோதிலும் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

    இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில், சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 2 கிறிஸ்தவ ஆலயங்கள், பானாம்பட்டு சாலை சந்திப்பில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் கடைகளின் ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கிழக்கு சண்முகபுரம் காலனிக்கு செல்லும் முனையில் உள்ள ராஜகணபதி கோவிலும் அகற்றப்பட்டது. ஆனால் மகாராஜபுரத்தில் உள்ள புத்துவாழி மாரியம்மன் கோவிலை அகற்ற முயன்றபோது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் இந்த கோவில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இல்லை என்றும் இதனை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். இருப்பினும் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் இந்த கோவிலை அகற்றுவதில் உறுதியாக இருந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு சில நாட்கள் அவகாசம் வழங்கினர். அதிகாரிகள் கொடுத்த அவகாசம் முடிவடைந்த நிலையில் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பொருட்களை கோவில் நிர்வாகத்தினர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர்.

    இதையடுத்து இந்த கோவிலை அகற்ற முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பணிகள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு அப்பணிகள் நடந்து வருகிறது.

    அதன்படி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில், சாலை விரிவாக்க பணியை தேசிய நெடுஞ் சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இதையொட்டி மகாராஜபுரம் புத்துவாழி மாரியம்மன் கோவிலை இடித்து அகற்றுவதற்காக காலை 6.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் ஸ்ரீதர், வினோதினி, தமிழ்மலர், தாசில்தார் கணேஷ் ஆகியோர் அங்கு சென்றனர்.

    பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவிலை இடித்து அகற்றும் பணிகள் நடந்தது. 1 மணி நேரத்திற்குள் அந்த கோவில் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதி சாலைகள் விசாலமாக காட்சியளித்தது.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து கோலியனூர் வரை 6 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள், மரங்கள், கோவில்கள் அகற்றப்பட்டதோடு, சில இடங்களில் மின் கம்பங்களை மாற்றி மின் இணைப்பு வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது. அப்பணிகள் முடிந்ததும் விடுபட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும். அதுபோல் தற்போது கோவில் அகற்றப்பட்ட இடத்திலும் சாலை அமைக்கப்படும். இப்பணிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும். அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என்றனர்.

    விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×