search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் (கோப்புப்படம்)
    X
    திருமணம் (கோப்புப்படம்)

    மும்பையில் நடந்த மகள் திருமணத்தை வீடியோகாலில் பார்த்த பெற்றோர்

    மதுரையை சேர்ந்த ஒரு பெற்றோர் தன் மகளின் திருமணத்தில் நேரில் பங்கேற்க முடியாமல் வீடியோகாலில் பார்த்து கண்ணீர் மல்க வாழ்த்தி உள்ளது நெகிழவைத்துள்ளது.
    சோழவந்தான்:

    உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் பொதுமக்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முக கவசம் அணிந்தபடி பொது மக்கள் ஒருவித பீதியுடன் தான் உலா வருகிறார்கள்.

    ஊரெல்லாம் கோவில்கள் அனைத்தும் மூடிகிடக்கிறது. இதனால் கோவிலில் வைத்து நடக்க வேண்டிய திருமணங்கள் மூடப்பட்ட கோவில் முன்பு நடந்தேறி வருகின்றன. உறவினர்கள் புடைசூழ ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விருந்துகளுடன் நடைபெறும் திருமணங்கள்கூட கொரோனாவால் 5 பேர், 10 பேர் முன்னிலையில் நடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    இதன் உச்சக்கட்டமாக மதுரையை சேர்ந்த ஒரு பெற்றோர் தன் மகளின் திருமணத்தில் நேரில் பங்கேற்க முடியாமல் வீடியோகாலில் பார்த்து கண்ணீர் மல்க வாழ்த்தி உள்ளது நெகிழவைத்துள்ளது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்-மீனா ஆகியோருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளுக்கும், மகனுக்கும் திருமணம் முடிந்து விட்டது.

    2-வது மகள் அர்ச்சனாவிற்கு மும்பையில் உள்ள இவரது மைத்துனர் சுபாஷ்- பிரேமா ஆகியோர் மகன் ராஜேஸ்வருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருவித்துறையில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. அன்றே நேற்று (27-ந்தேதி) குருவித்துறையில் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    நிச்சயதார்த்தம் முடிந்ததும் மகள் அர்ச்சனா மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்குள்ள பாட்டி வீட்டில் தங்கி அர்ச்சனா வேலை பார்த்து வந்தார்.

    தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், மணமக்கள் மும்பையில் வேலை பார்ப்பதாலும் மணமகன் வீட்டிலேயே திருமணம் நடத்துவது என்று இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

    இதையடுத்து கண்ணனும், அவரது உறவினர்களும் ரெயில் மற்றும் விமானத்தில் மும்பை செல்வதற்கு டிக்கெட் புக் செய்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவால் ரெயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் மும்பை செல்ல முடியவில்லை.

    ஆனாலும் மகள் திருமணத்தை குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு கண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். தாங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெற வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து மணமகன் வீட்டார் நேற்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    நேற்று காலை மும்பை அண்டாப் கில் சித்தாலா தேவி மந்திரி கோவிலில் ராஜேஸ்வர்-அர்ச்சனா திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் உறவினர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

    மகளின் திருமண நிகழ்ச்சியை குருவித்துறையில் வசித்து வரும் பெற்றோர் வீடியோகாலில் பார்த்தனர். பின்னர் கண்ணீர் மல்க மகளுக்கு வீடியோகாலில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வீட்டில் இருந்த படியே ஆனந்த கண்ணீருடன் மணமக்களை அவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.

    இந்த நிகழ்வு உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மகள் கல்யாணத்திற்கு செல்ல முடியாத பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

    எங்கள் மகள் அர்ச்சனா கடைசிப் பிள்ளை என்பதால் எங்கள் குருவித்துறை கிராமத்திலேயே சிறப்பாக திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். மாப்பிள்ளை வீட்டாரும் பூர்வீகம் குருவித்துறை என்பதாலும் திருமணத்திற்கு அதிகமான ஆட்கள் இங்கு வருவார்கள் என்று நினைத்தோம். கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மகளும், மாப்பிள்ளை வீட்டாரும் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாப்பிள்ளையும், பெண்ணும் அங்கு இருப்பதால் உறவினர்கள் திருமணத்தை மும்பையிலேயே நடத்துவதாக கூறினார்கள். இதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.

    ஊரடங்கு உத்தரவால் ரெயில் மற்றும் விமானம் டிக்கெட்டை ரத்து செய்து விட்டனர். இதனால் நாங்கள் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்த வேண் டும் என்று நாங்கள் கூறியதால் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது. இதை நாங்கள் வீடியோகால் மூலமாக பார்த்தோம்.

    நேரில் சென்று திருமணத்தை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் எங்களுடைய மனதில் உள்ளது. இருந்தாலும் மகள் திருமணம் நன்றாக நடந்தது என்ற சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்து இங்கிருந்தபடியே எங்களது மகள் திருமணத்தை பார்த்து ஆசீர்வாதம் செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருமணம் முடிந்தவுடன் அர்ச்சனா வீடியோகால் மூலம் கூறியதாவது:-

    என்னை செல்லமாக வளர்த்து படிக்க வைத்து உயர்வான வாழ்க்கையை அமைத்து கொடுத்த எனது பெற்றோர் இல்லாமல் இந்த திருமணம் நடந்தது வருத்தமாகத்தான் உள்ளது. செல்போனில் என்னை வாழ்த்தினாலும் விரைவில் பெற்றோரை நேரில் பார்த்து காலில் விழுந்து வணங்கினால்தான் எனது மனம் நிறைவாகும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் குருவித்துறைக்கு சென்று வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
    Next Story
    ×