search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    மருத்துவ உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    சேலத்தில் 3 சுகாதார நிலையங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை

    சேலத்தில் 3 சுகாதார நிலையங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பலனாக மாநகராட்சி பகுதிகளில் கடந்த 33 நாட்களாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் சேலம் மாநகராட்சி தொடர்ந்து பச்சை மண்டலமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், குமாரசாமிபட்டி, அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை வளாகம் மற்றும் அன்னதானப்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் கொரோனா தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவுகளுக்கு தேவையான 30 மெத்தை, 30 இரும்பு கட்டில், 30 நோயாளிகளின் கட்டில் அருகில் மருத்துவ பொருட்களை வைக்கும் அலமாரி, குளுக்கோஸ் ஸ்டேண்டு-15, நகரும் கட்டில்-2, இதயதுடிப்பு, நாடிதுடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கும் கருவி-19, ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவிடும் மானி-29, இ.சி.ஜி. கருவி-8, மருந்துகளை நோயாளியின் உடலில் சீரான அளவில் செலுத்த உதவும் கருவி-3, அபு பேக்-6, நாடிதுடிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கும் கருவி-40, ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி-40 என மொத்தம் 13 வகையான 252 மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    முன்னதாக குமாரசாமிபட்டி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு, வழங்கப்பட உள்ள மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், புதிதாக வாங்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் மருதபாபு, மருத்துவ அலுவலர் சரண்யா மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×