search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால்
    X
    ஆவின் பால்

    போதிய குளிர்ச்சி இல்லாததால் பால் தயிர் போல் மாறும் நிலை - பொது மக்கள் புகார்

    பால் பண்ணைகளில் இருந்து வரும் பால் பாக்கெட்கள் நீண்ட நேரம் ரோட்டு ஓரம் இருப்பதால் வீடுகளுக்கு விநியோகிக்கும் ஆவின் பால் கெட்டு போவதாக பொது மக்கள் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் ஆவின் பாக்கெட் பால் சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரம் பால் பண்ணைகளில் இருந்து பாக்கெட்டுகளாக தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.

    சென்னை முழுவதும் சுமார் 13½ லட்சம் லிட்டர் பால் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இதில் அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து 3 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் விநியோகம் நடைபெறுகிறது.

    தற்போது அக்னி வெயில் காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகாலையில் ஆவின் பால்பாக்கெட்டுகள் வேன்களில் கொண்டுவரப்பட்டு ஆங்காங்கே முகவர்களுக்கு பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பி கொடுக்கப்படுகிறது.

    காலையிலேயே கடைகள் திறக்கப்படாததால் ரோட்டு ஓரங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்படுகின்றன. நீண்ட நேரம் ரோட்டு ஓரம் பால் பாக்கெட் கிடப்பதால் வெப்பத்தால் பால்பாக்கெட் குளிர்ச்சி குறைந்துவிடுகிறது.

    இதன்பிறகு இந்த பாக்கெட்டை வீடுகளுக்கு வியாபாரிகள் விநியோகம் செய்யும் போது பால் பாக்கெட் அதற்குள் கெட்டு விடுகிறது.

    அம்பத்தூர், புதூர், கள்ளிக்குப்பம், பானுநகர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் கெட்டுப்போன பால்பாக்கெட் பல வீடுகளில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொது மக்கள் பலர் கடைக்காரர்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    அம்பத்தூர், புதூர் பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட் நிறைய கெட்டுப் போவதாக எங்களுக்கும் தகவல்கள் வருகிறது. பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன அறையில் வைத்திருந்துதான் வெளியே அனுப்ப வேண்டும்.

    ஆனால் அப்படி செய்யாமல் அப்படியே வேனில் ஏற்றி அனுப்புவதாக தெரிகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதுபோல் செய்வதாக தகவல் வருகிறது. எனவே பால் பண்ணைகளில் போதிய குளிர்சாதன வசதியில் பால்பாக்கெட்டை பாதுகாத்து அதன்பிறகு வேனில் ஏற்ற வேண்டும்.

    தற்போது கோடைகாலம் என்பதால் பால்பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வேன்களும் குளிர் நிலையை பராமரிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளை கொண்டு வர வேண்டும். காலை 6 மணிக்கெல்லாம் பால் பாக்கெட் கெட்டுப்போகிறது என்றால் கூலிங் இல்லாததே காரணம் ஆகும்.

    எனவே ஆவின் நிர்வாகம் பால்பாக்கெட் கெடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×