search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு பூ மார்க்கெட்
    X
    கோயம்பேடு பூ மார்க்கெட்

    பூ, பழம் வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு?

    கோயம்பேடு சந்தையில் பூ, பழ கடைகளை குறைந்த அளவில் மீண்டும் கடுமையான கட்டுபாடுகளுடன் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அங்காடி நிர்வாக குழு அதிகாரி தெரிவித்தார்.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி பூ, பழம் மார்க்கெட் மூடப்பட்டது

    பின்னர் அங்கு செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டும் கடந்த 5-ந் தேதி மூடப்பட்டது. பூ மற்றும் பழ மார்க்கெட்  வியாபாரிகளுக்கு  மாதவரம் பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு திருமழிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குறைந்த அளவில் கடைகளை ஒதுக்கியதால் பூ மார்க்கெட் வியாபாரிகள் பெரும்பாலானோர் மாதவரம் பஸ் நிலையத்திற்கு செல்லவில்லை.

    ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே சாலையோரம் கடைகள் வைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தையை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் உயர்ரக கிருமி நாசினிகள் மார்க்கெட் வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டு வருகின்றன.

    ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் வரும் நாட்களில் குறைந்த அளவில் பொது போக்குவரத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மாநகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாதவரம் பஸ் நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருவதால் முதல் கட்டமாக பூ மற்றும் பழ மார்க்கெட்டை கோயம்பேடு சந்தைக்கு மீண்டும் மாற்றுவது குறித்து சி.எம்.டி.ஏ. மற்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் தீவிரஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் கூறும்போது, ‘கோயம்பேடு சந்தையில் பூ மற்றும் பழ கடைகளை குறைந்த அளவில் மீண்டும் கடுமையான கட்டுபாடுகளுடன் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.

    பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி மூக்கையா  கூறியதாவது:-

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள், மாலை கட்டுபவர்கள்,  தொழிலாளர்கள் என பலர் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர். 10 கடைகள் மட்டுமே எங்களுக்கு  ஒதுக்கியதால் மாதவரம் பஸ் நிலையத்திற்கு பூ வியாபாரிகள் யாரும் செல்லவில்லை.

    மேலும்  எங்களது சங்கம் சார்பாக அமைந்தகரை அண்ணா வளைவு அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம்,  வானகரம் ஈஸ்வரன் கோவில் மைதானம் ஆகிய 2 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.

    ஆனால், இதுவரை எங்களுக்கு இடம் ஏதும் ஒதுக்கப்படவில்லை. பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில்  திறந்த வெளியில் குடைகள் அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×