search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழை மரங்கள்
    X
    வாழை மரங்கள்

    ஊரடங்கு உத்தரவு எதிரொலி- நிலைகுலைந்த விழுப்புரம் மாவட்ட வாழை விவசாயிகள்

    வாழை விவசாயிகளை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும் என்பது பழமொழி. இந்த பழமொழிதான் தற்போது விவசாயிகளின் நிலை. ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழை விவசாயிகள் நிலைகுலைந்துபோய் உள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரை சுற்றி நன்னாடு, தோகைபாடி, வி.பாளையம், ஏனாதிமங்கலம், மாரங்கி உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கரிலும், திண்டிவனம் பகுதியில் 1000 ஏக்கரிலும், செஞ்சி பகுதியில் 1000 ஏக்கரில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு வெட்டப்படும் வாழைகள் திருமண மண்டபம், சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக இந்த மண்டபங்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது.

    திருமண நாளில் இந்த மண்டபங்களின் முன்பு 6 முதல் 20 வாழை மரங்கள் வரை வசதிக்கு ஏற்ப கட்டி பந்தல் அலங்காரம் செய்வார்கள்.

    அதேபோல் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் 20 முதல் 30 வாழை மரங்களை பந்தலில் கட்டுவார்கள். அத்துடன் எல்லா விழாக்களுக்கும் பந்தியில் விருந்துக்கு வாழை இலைகளை பயன்படுத்துவார்கள்.

    விவசாயிகள் ஒரு ஏக்கரில் 200 மரங்கள் வரையில் ஒரு ஆண்டுக்கு வளர்க்கின்றனர். குலையுடன் உள்ள வாழை மரம் ஒன்றை 400 முதல் 600 வரை விற்கின்றனர். 200 முழு இலைகள் உள்ள ஒரு கட்டு இலை 1,500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். இதில் 40 சதவீதம் சாகுபடிக்கு செலவாகி விடும்.

    இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் மண்டபங்களில் திருமணம் நடத்தவும், கோவில்களில் திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

    திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் விருந்து உபசரிப்புகள் இன்றி வாழை இலையின் தேவையும் குறைந்தது.

    வாழை இலை பயன்படுத்தும் பெரிய ஓட்டல்களும் மூடப்பட்டன. இதனால் வாழைமரம், வாழை இலை 2-க்கும் தேவை 90 சதவீதம் குறைந்தது. பெரும்பாலான வாழைத் தோப்புகளில் வாழை குலை தள்ளி உள்ளது. வாழைபழத்தின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதன் விலையும் குறைந்துள்ளது.

    எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சில இடங்களில் விவசாயிகள் வாழை மரங்களை அழித்து விட்டனர். மீதம் உள்ளவர்களும் சாகுபடி செலவை மீட்டால் போதும் என்ற பரிதாப மனநிலையில், வாடிப்போய் உள்ளனர்.

    எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×