search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வார்டு
    X
    கொரோனா வார்டு

    ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் 18 ஆண்கள் உள்பட 30 பேருக்கு சிகிச்சை

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 ஆண்கள், 8 பெண்கள், 4 குழந்தைகள் என 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 30-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்களது உறவினர்கள் 11 பேரும் அனுமதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.

    இந்த நிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்த குமரி மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து ஆரல்வாய்மொழி, களியக்காவிளையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வருபவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வந்த பிறகே அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதில் இதுவரை 11 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். 27 பேர் கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரைச் சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 ஆண்கள், 8 பெண்கள், 4 குழந்தைகள் என 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    30 பேரில் 12 பேர் சென்னையில் இருந்தும், 11 பேர் மும்பையில் இருந்தும் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். சென்னை, மும்பையில் இருந்து வந்தவர்களால்தான் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    வெளியூர்களில் இருந்து சிலர் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் இருந்து சிலர் தப்பி ஊருக்குள் வந்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 12,236 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 11,946 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மீதமுள்ளவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தற்போது வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் உள்பட 342 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×