search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அவனியாபுரம் ரவுடி கொலையில் 3 பேர் கைது

    அவனியாபுரம் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்கு பழியாக ரவுடியை கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை அவனியாபுரம் வைகை தெரு காமராஜர் நகரைச் சேர்ந்தவன் விக்னேஷ் என்ற சுப்பிரமணியம் (வயது26). இவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடியான சுப்பிரமணியம் தாயார் ராணியுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அந்த பகுதியில் சுப்பிரமணியம் மோட்டார் சைக்கிளில் நின்றபோது காரில் வந்த சிலர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2018-ம் ஆண்டு திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாரி என்பவரை அரிவாளால் வெட்டியதாக சுப்பிரமணியம் மீது வழக்கு உள்ளது தெரியவந்தது.

    இந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாக மாரி, அவரது கூட்டாளிகள் தங்கப்பாண்டி, டோக் ரவி ஆகியோர் சேர்ந்து தற்போது சுப்பிரமணியத்தை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் மாரி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    கைதான மாரி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த சில மாதங்களாக என்னை கொலை செய்ய சுப்பிரமணியம் ரகசிய சதி திட்டம் தீட்டி வந்ததாக தகவல் கிடைத்தது. இதற்காக மும்பையைச் சேர்ந்த சரண் உள்ளிட்ட பலரிடம் உதவியும் கேட்டுள்ளார். இது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். என்னை கொல்வதற்குள் முந்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்து சுப்பிரமணியத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

    சம்பவத்தன்று சுப்பிரமணியம் தனியாக நிற்பதை அறிந்து நான் நண்பர்களுடன் அங்கு சென்றேன்.எங்களை கண்டதும் சுப்பிரமணியம் தப்பி ஓடி முயன்றான். ஆனால் நாங்கள் அவனை வெட்டிக்கொலை செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் அவனியாபுரத்தைச் சேர்ந்த மணி, சோனா, சோபன் ஆகியோர் ஏற்கனவே சுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டிய தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த கொலையில் அவர்களுக்குள் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மணி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×