search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்துள்ள மக்கள்
    X
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்துள்ள மக்கள்

    எப்போதும் முகக்கவசம் அணிவது ஆபத்தா?

    முகக்கவசங்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி உள்ள நிலையில் இது தொடர்பாக டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
    முகக்கவசங்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் குறைந்து அதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி உள்ளது. இது தொடர்பாக டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    மருத்துவர்கள் கூறும்போது, “நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதன் மூலம் மூச்சு திணறல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது 99 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் நமக்கு கிடைக்கும். முகக்கவசம் அணியும்போது அது 95 சதவீதமாக குறையும். 94 சதவீதம் வரை ஆக்சிஜன் கிடைக்கும்போது எந்த பிரச்சினையும் இல்லை. நுரையீரல் தொடர்பான நோய்கள் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியும்போது இந்த அளவுக்கு ஆக்சிஜன் கிடைத்து கொண்டே இருக்கும்.

    அதே நேரத்தில் நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆக்சிஜனின் அளவு மேலும் குறையும். 92 சதவீதம் அளவுக்கும் குறைவாக ஆக்சிஜன் கிடைக்கும்போதுதான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவேதான் வயதானவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று கூற முடியாது. அது தவறான பிரசாரமாக மாறி விடும். தேவைப்படும் இடங்களில் மட்டும் முகக்கவசங்களை அவர்கள் அணிந்து கொள்ளலாம்.

    கொரோனா வைரஸ்

    தற்போது முகக்கவசம் அணிந்து பணியாற்றும் அனைவருமே முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டிய அவசியமில்லை. யாரிடமாவது பேச வேண்டும் என்ற நேரத்திலும், வெளியில் செல்லும் சமயங்களிலும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளலாம். முகக்கவசங்களை அணியும்போது சிலருக்கு எரிச்சல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தற்போதைய சூழலில் அதையும் தாங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை. சில நாட்களுக்கு பிறகு அது தானாகவே சரியாகி விடும்.

    எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முகக்கவசம் முக்கிய பங்காற்றுவது என்பதில் மாற்று கருத்தே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×