search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    அறநிலையத்துறை வீட்டு வாடகையை 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க அறநிலையத்துறை வீட்டு வாடகையை 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் குடியிருப்போரிடம் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைக்கான தொகையை குடியிருப்போரின் பொருளாதாரப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு கட்டாயப்படுத்தாமல் பெற்றுக்கொள்ள உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    தமிழக அரசு கொரோனாவால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் தனியார் வாடகை வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்போரிடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இது வாடகைக்கு குடியிருக்கும் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு பயனளிக்கிறது.

    அதே போல இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் சொத்துக்களில் வாடகைக்கு குடியிருப்போர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும்.

    அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் சொத்துக்களில் பல வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இவ்வாடகை வீடுகளில் குடியிருக்கும் சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மாத வாடகைத் தொகையை செலுத்தி குடியிருக்கிறார்கள். இவர்களும் இப்போதைய கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தமிழக அரசு வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு எப்படி வேண்டுகோள் வைத்து 2 மாதங்கள் கழித்து வாடகையைப் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டதோ அதே போல திருக்கோயில்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்போரும் 2 மாதங்கள் கழித்து வாடகைத் தொகையை செலுத்தலாம் என்றால் தான் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள்.

    எனவே தமிழக அரசு தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாடகை வீடுகளில் குடியிருப்போரின் பொருளாதார சுமையைக் கவனத்தில் கொண்டு வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×