search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோஷ்டி மோதல்
    X
    கோஷ்டி மோதல்

    சுவாமிமலை அருகே பொது குளத்தில் மீன் பிடிப்பதில் கோஷ்டி மோதல்

    சுவாமிமலை அருகே பொது குளத்தில் மீன் பிடிப்பதில் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த திம்மகுடியில் வசிப்பவர் பிச்சயைம்மாள். பாபுராஜபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். இவரது கணவர் செல்வராஜ். பாபுராஜபுரம் அருகே திம்மகுடியில் பாபுராஜபுரம் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது.

    இந்த குளத்தில் மீன் பிடித்து விற்பதற்கான ஏல உரிமையை செல்வராஜ் பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த குளத்தில் மீன் பிடித்து விற்பதற்கு செல்வராஜ், அவரது மகன் வெங்கடேஷ், பாபுராஜபுரம் ஊராட்சி தலைவர் மகேஸ்வரியின் கணவர் கணேசன் ஆகியோர் மீன் பிடிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்து இந்த குளத்தை யாரை கேட்டு ஏலம் விட்டீர்கள். இதற்கு அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் உருவானது. இதில் இரு பிரிவினரும் ஏற்பட்ட மோதலில் செல்வராஜின் மகன் வெங்கடேஷ், கணேசன் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கும்பகோணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த சுவாமிமலை போலீசார் குளத்தில் மீன் பிடிப்பதை எதிர்ப்பு தெரிவித்தவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் செல்வராஜ், தகராறு செய்தவர்கள் மீது புகார் மனு அளிக்க சுவாமிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த செல்வராஜை போலீசார் காவல் நிலையத்தில் இருக்குமாறு உத்தரவிட்டனர்.

    இந்த தகலறிந்த பாபுராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், செல்வராஜை விடுவிக்க கோரியும் கும்பகோணம்-சுவாமிமலை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு அரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரும் ஊர்வலமாக வந்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் தகராறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதன் பின்னர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலெட்சுமி இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளபோது பொதுமக்கள் மீன் பிடிக்க அனுமதியில்லையென்றும், அது தொடர்பாக செல்வராஜிடம் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்.

    மேலும் போலீஸ் அனுமதியின்றி தொடர்ந்து கூட்டம் கூடி இங்கு முற்றுகையிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எச்சரித்தார். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×