search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனை சாவடி முன்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள் பிரசாந்த்-காயத்ரி.
    X
    சோதனை சாவடி முன்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள் பிரசாந்த்-காயத்ரி.

    திருமணம் செய்தும் இணைந்து செல்ல முடியாமல் கொரோனா தடுத்து விட்டதே.... மணமக்கள் ஏக்கம்

    திருமணம் செய்தும் இணைந்து செல்ல முடியாமல், கொரோனா தடுத்து விட்டதே என்ற ஏக்கத்துடன் மணமக்கள் பிரிந்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி சுப்பிரமணியன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். அவருடைய மகன் பிரசாந்த் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கும், கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வாலாடியை சேர்ந்த கணேசனின் மகள் காயத்ரி (19) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

    இவர்களுக்கு வாலாடியில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்காக மணமகனின் குடும்பத்தினர், க.புதுப்பட்டியில் இருந்து வாலாடி செல்வதற்கு இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த விவரத்தை மணமகனின் குடும்பத்தினர், மணமகளின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து க.புதுப்பட்டியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதற்காக மணமகளின் குடும்பத்தினர் அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இரு வீட்டாரும் பேசி, திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதனால், மணமக்களை அவர்களின் குடும்பத்தினர் தமிழக-கேரள எல்லையான குமுளிக்கு அழைத்து வந்தனர். இருவரையும் எல்லையை தாண்டி வேறு எங்கும் செல்லக்கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

    இதையடுத்து குமுளியில் உள்ள கேரள மாநில போலீஸ் சோதனை சாவடி முன்பு திருமண ஏற்பாடு நடந்தது. மணமக்கள் தங்களின் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகள் காயத்ரி கழுத்தில் பிரசாந்த் தாலி கட்டினார். அவர்களின் குடும்பத்தினர் சுமார் 10 பேர் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். மணப்பெண்ணை தமிழகம் அழைத்து வர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மணமகள் கேரள மாநிலத்துக்கும், மணமகன் தமிழகத்துக்கும் சென்று விட்டனர். திருமணம் செய்தும் இணைந்து செல்ல முடியாமல், கொரோனா தடுத்து விட்டதே என்ற ஏக்கத்துடன் மணமக்கள் பிரிந்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×